மழை-8, துளி-14 : கருப்பை செய்யும் அம்மா

 கருப்பை செய்யும் அம்மா

வெந்த கருப்பையை
அம்மா கழற்றி வைத்திருந்தாள்.
நமுத்த விறகு
ஊதலுக்காய்க் காத்திருந்தது.
இட்லி எட்டணா, தோச ஒர்ருவா,
பணியாரம் நாலணா…
பள்ளிக்கூடத்துப் புள்ளய்ங்க வந்தாக்குடுன்னு
சொல்லிவிட்டு
அம்மா தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தாள்.
முதன்முறையாக அடுப்பை ஊதினேன்.
அடிவயிறு பத்திக்கிட்டு எரியுதுடா என்ற
அம்மாவின் குரல் ஞாபகம்
என் அடிவயிறைப் பற்றச் செய்தது.
மடியில் கிடத்தி, தலை வருடி
உறங்கச் சொல்லிய இரவொன்றில்
என்னைச் சுற்றி கருப்பை செய்துகொண்டிருந்தாள்
அம்மா,
உறங்காது விழித்தபடி.
-முனி, திண்டுக்கல்
நன்றி: ‘பயணம் புதிது’, ஜூலை-ஆகஸ்ட்-2006

மழை-7,துளி-9 : ஒரு பால்ய காலக்கனவு

மழை-7,துளி-9

ஒரு பால்ய காலக்கனவு –கே.கே.சாமி

பால்யம் மீள்வதேயில்லையார்க்கும்!

ஒற்றை அரிசியில்

ஊருக்கேசமைத்துப் போடும் கலையிருந்தது

என் பால்யத்தில்.

மாட்டுக் கொட்டகை அரங்கில்

ஒற்றைக்கண் ஓமப்பொடியைக்

கைது செய்கையில்

தடுக்கி விழுந்த ‘கான்ஸ்டபிள்   கண்ணாயிரம்’

பின்னாளில் கணித ஆசிரியன்   ஆனான்,

‘தாமஸ் ஆல்வா எடிசன்’ அந்தோணிதாஸ்

தறிச்செட்டில் தொடர்கிறானாம்   புதிய முயற்சியை.

எல்லோருடையதையும் விட

வேகமாக ஓடும் டயர் வண்டி

எல்லோரிடமும் இருந்தது,

எங்கள் பால்யத்தில்.

தூக்கம் கலைந்த குழந்தை   சொன்னாள்,

“அப்பா டைனோசரு வந்து

பாதி டியூசன கடிச்சி முழுங்கிருச்சி”..

பால்யம் மீள்வதேயில்லை.

(மாணவன் நந்துவிற்கு நன்றி)

நன்றி: ‘பயணம் புதிது’ –   ஜூலை-ஆகஸ்ட்-2006

மழை-7, துளி-8 : வெளியே வாருங்கள்

மழை-7, துளி-8

வெளியே வாருங்கள் – ம. ஜெயப்பிரகாஷ் வேல்

அந்த மலைவனத்தில்

நீங்கள் வெட்டிய முதல்மரம்

ஓர் ஓநாயின்மேல் விழுந்தது.

வெட்டுண்ட மரத்தின்

வேரைப் பறித்தபோது

ஒரு முயலின் குழியை மூடிவிட்டீர்கள்.

தரையைச் சமதளமாக்கும்போது

பாறைகளை உருட்டி

லைக்கன்களைப் புதைத்தீர்கள்.

நீங்கள் எழுப்பிய

தேயிலைச் செடிகளின் கசப்பில்

மான்களும் தடுமாறின.

நடுவே உங்களின் வீடுள்ள

குன்றில்தான்

முன்பு வரையாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

உங்களின் அசுரத்தனமான

ஆலைச் சங்கொலியில்

யானைகளும் தம் பிளிறலை மறந்தன.

வழியெங்கும் உங்கள்

வாகனங்களே வலம் வந்ததால்

சிறுத்தைகளும் புதர்களுக்குள் முடங்கின.

சிற்றாறுகளின் வழிகளை மாற்றினீர்கள்;

ஓடைகளின் பாடலை நிறுத்தினீர்கள்.

கானகத்தில் இருளை எழுதியவை

உங்களின் விரல்களே!

வெளிச்சம் வரட்டும்,

வெளியே வாருங்கள்!

(* லைக்கன் – மண்ணிற்கு வளமூட்டும் பூஞ்சை-பாசிகள் சேர்ந்த கூட்டுயிரி)

*நன்றி: பயணம் புதிது -ஜூலை-ஆகஸ்ட்-2006

மழை 4 துளி 9 : தேவை ஒரு கருத்து(இயல்) மாற்றம்

மழை 4 துளி 9

தேவை ஒரு கருத்து(இயல்) மாற்றம்

திங்கள், ஏப்ரல் 05, 2004

அன்புடன் பயணம் புதிது இதழாசிரியர் அவர்களுக்கு,
நலம். நமக்குள் கடிதப் பரிமாற்றங்கள் நடந்து வருடங்களாகின்றன. திரு சகாரா எழுதி தங்களது முயற்சியில் வெளியான “ நதிக்கரையில் தொலைந்த மணல் ” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் (புலியூர், ஜூலை 2001) “இணையத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் ஒரு உரையாடல் நடத்தும்படி நீங்கள் என்னைக் கேட்டுக்கொண்டீர்கள். உண்மையைச் சொல்லப் போனால் அந்த நேரத்தில் இணையத்தில் தமிழ் தொடர்பாய் நடந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் குறித்து எனக்கு இருந்த அறிவு மிகக்க் குறைவே. இருப்பினும் அந்த நிகழ்ச்சிக்காக நான் தயார் செய்யும் போதுதான் “இணையத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பு எவ்வளவு பெரிய கடலுக்குள் என்னை நீந்த வைக்கக் கூடிய முயற்சி என்பது எனக்கே விளங்கியது.

 

எனக்கிருந்த கால அவகாசக் குறைவால் என்னால் அதிகம் தயார் செய்ய இயலவில்லை. இருப்பினும் திருச்சி வானொலி நிலையத்தில் அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு தட்சிணாமூர்த்தி அவர்களுடன் சேர்ந்து நான் கலந்து கொண்ட அந்த உரையாடல் நன்றாக இருந்ததாக நிறையப் பேர் பாராட்டினார்கள் .

 

ஆனாலும் எனக்கென்னவோ நான் நிறையச் செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவில்லை என்ற மனக்குறை இருந்து கொண்டே இருந்தது. நமது பயணம் புதிது இதழில் இந்த தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதலாம் என்று நான் ஆவல் கொண்டேன். இருப்பினும், அந்த நல்ல காரியம் நடை பெறாதபடிக்கு நிறைய தடங்கல்கள் ஏற்பட்டன. எழில் மாதவனின் திடீர் மரணம், திரு சகாரா அவர்களின் இடமாற்றம், எனது திருமணம் என்பது போல ஏகப்பட்ட மாறுதல்களில் இதழுக்கும் எனக்குமான இடைவெளி மிகவும் அதிகமாகி விட்டது.

இவற்றிற்கு இடையில் தங்கள் கவிதைகள் சிலவற்றை நான் கணினியில் ஏற்றியது, தமிழ்நாடு முழுமைக்கும் ஆரம்பப்பள்ளிகளில் வாழ்க்கைக்கல்விப் பாடத்திட்டத்தைப் புகுத்துவதில் மும்முரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்த திரு மணமேடு குருநாதன் அவர்களின் கவிதைகள், உரை வீச்சுக்கள் முதலானவற்றை இணையத்தில் ஏற்றம் செய்ய விரும்பி திரு மாரியப்ப பிள்ளையின் உதவியுடன் நான் மேற்கொண்ட முயற்சி பலன் தராது போனது என்றவாறு பல நிகழ்வுகள் நடந்தேறின.

இருப்பினும், தங்களது கவிதைகளை இணைய இதழ்களில், குழுமங்களில் வெளியிடுவதில் ஓரளவிற்கு நான் வெற்றி பெற்றேன். உங்களது கவிதைகள் ஓடையில் வெளிவந்தன. திரு சகாரா அவர்களின் கவிதைகள் Halwacity.com, வார்ப்பு, தினம் ஒரு கவிதை குழுமம் ஆகியவற்றில் வெளிவந்தன. இன்று நான் உட்கார்ந்து பின்னோக்கி சிந்திக்கும்போது நாம் கடந்து வந்த தூரங்கள்/பாதைகள் தாண்டி நாம் செல்ல வேண்டிய இலக்கு மிகவும் தூரமாகத் தெரிகிறது. இந்தத் தூரத்தை விரைவில் கடக்க வேண்டின் இதழியல் குறித்தான நம் கருத்துகளில் சில மாற்றங்கள் அவசியம் என்றே நினைக்கிறேன்.

பெரும்பாலும் பணக்காரர்களின் பொழுதுபோக்கு விளையாட்டுப் பொருளாக நமக்கு அறிமுகமான இணையம், தற்போது தனது எல்லைகளை விரித்துக் கொண்டே வந்து இன்று இலக்கியத்தை வெளியிடும்/படிக்கும் ஒரு ஊடகமாகவும் வளர்ந்திருக்கின்றது. எந்தக் கணினியிலும் தமிழைத் தெளிவாக தமிழ் வடிவங்களிலேயே காட்டும் யூனிகோட் என்ற எழுத்துவகைத் தொழில் நுட்பம் அறிமுகமான பின்னால் இது இன்னும் பல்கிப் பெருகிக் கொண்டு வருகின்றது.

ஆங்கிலம் போலவே தமிழை நேரடியாகக் கணிணியில் உள்ளீடு செய்யும் கருவிகளை தமிழ் உணர்வுள்ள அறிவியலாளர்கள் / ஆர்வலர்கள் உருவாக்கி யார்வேண்டுமானலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள இணையத்தில் போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக தமிழில் யார் எழுதியதையும் யார் வேண்டுமானாலும் உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்தத் தடங்கலுமில்லாமல் தமிழிலேயே படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க நல்ல சிற்றிதழ்கள் ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்துக்கு அப்பால் பரவ இயலுவதில்லை. அப்படி ஒரு சிற்றிதழ் இருப்பதே படிக்கத் தயாராக இருக்கும் நிறைய வாசகர்களுக்குத் தெரியாமல் போய்விடுகிறது என்பதும் ஒரு கசப்பான உண்மை. இந்த ஒரு சூழலில் ஒரு சிற்றிதழில் வெளிவரும் நல்ல கருத்துக்கள் எல்லா மக்களையும் போய்ச் சேர வேண்டுமெனில் காகித இதழோடு இணையத்திலும் அதனை வெளிவரச் செய்வது ஒரு நல்ல முயற்சியாக எனக்குத் தோன்றுகிறது.

இன்று உலகம் அறிவியலின் பலன்களைப் படிகளாய்ப் பயன்படுத்திக் கொண்டு உயரே சென்று கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் காகித இதழ்களில் எழுதிக்கொண்டிருக்கும் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கு இணையத்தில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நல்ல படைப்புகள் போய்ச் சேர்வதற்கும் , சிற்றிதழ்களில் வெளியிடப்படும் நல்ல படைப்புகளை இணைய வாசகர்கள் படிக்கவும் ஏதேனும் ஒரு நல்ல வழி கண்டுபிடிக்க வேண்டும்.

இரண்டு வகையான ஊடகங்களுக்கும் இடையில் யாரேனும்/எதுவேனும் பாலமாக இருந்து கருத்துப் பரிமாறலுக்கு ஒரு வழி ஏற்படுத்த வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். எல்லோருக்கும் இணைய இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு அமைவது கடினமே. புலியூர் போன்ற நகரமாகி வரும் ஊர்களில் வேண்டுமானால் இது சாத்தியமாகலாம்.

இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் காகிதத்தில் வந்து கொண்டிருக்கும் சிற்றிதழ்களைப் படிக்கிறார்களா என்பது சந்தேகமே. நம் நாட்டு எல்லைகள் தாண்டி காகித இதழ்களை அஞ்சல் செய்வதும் பொருளாதார ரீதியில் சிற்றிதழ் ஆசிரியர்களுக்குச் சாத்தியமில்லை. (சொந்தப் பணத்தை முதலீடாக இட்டுத்தான் நிறைய சிற்றிதழ்கள் வெளி வருகின்றன என்ற உண்மை அனைவரும் அறிந்த ஒன்றே).

எனவே இது குறித்து நான் வெகுநாட்களாக உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த சில கருத்துக்களை உங்களுக்கு இன்று கடிதமாய் எழுத நேர்ந்தது. எனக்குத் தெரிந்த வரை, புத்தகத்தை அச்சிடுமுன் கணினி வழியாகத் தட்டச்சு செய்துதான் அச்சிடுகிறோம். எனவே ஏற்கனவே கணினியில் உள்ளிடப்பட்ட படைப்புகளை இணையத்தில் உள்ளிடுவதில் அதிக சிரமம் இருக்கப் போவதில்லை. இருப்பினும் , அச்சிடுவதற்காக கணினிக்குள் உள்ளிடும்போது பயன்படுத்தப்படும் எழுத்துரு (Font) என்ன என்பது மிக முக்கியமாகிறது. ஏனெனில் இந்த எழுத்துருவில் உள்ளிடப்பட்ட படைப்புகளை யூனிகோட் எழூத்துக்கு மாற்ற முடியுமா என்ற சிக்கலுக்கு நாம் விடை கண்டு பிடித்தாக வேண்டும். Tscii/Tam/Tab எழுத்துருவாயின் யூனிகோடுக்கு மாற்றத் தேவையான கருவிகள் நமக்குக் கிடைத்துவிடும்.

இந்த சிக்கலுக்கு நாம் விடை கண்டுபிடிக்க வேண்டுமெனில், நீங்கள் அச்சிடும் அச்சகத்தாரிடம் அவர்கள் பயன்படுத்த வேண்டிய எழுத்துரு பற்றி முதலிலேயே சொல்லி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருக்கும். ஒருவேளை எழுத்தின் வடிவ மாற்றம் தவிர்க்க முடியாதது எனில் அதனை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இதற்குப்பிறகு, இணையத்தில் நிறைய நிறுவனங்கள் அளித்துவரும் இலவச இணைப்பக்கங்கள் /குழுக்கள் / வலைப்பூக்கள் வழியாக தேர்தெடுத்து சில கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடலாம். (அனைத்தையும் வெளியிடுவதானாலும் சரியே. இருப்பினும் அப்போது நமக்கு இலவசமாக அளிக்கப்பட்ட குறைந்த இடத்தில் முழு இதழையும் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.)

குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, வாசகர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து /இதழின் வளர்ச்சியைப் பொறுத்து, நமக்கென்று ஒரு இணைய தளத்தையும் விலைக்கு வாங்கி சிற்றிதழைப் பேரிதழாக மாற்றலாம். எனவே காகிதத்தில் இருந்து கொண்டிருக்கும் நமக்கு , கணினிக்கு மாறுவது குறித்து ஒரு கருத்தியல் மாற்றம் வர வேண்டும்.

இணையத்தின் வழியாகக் கிடைக்ககூடிய வாசகர்களின் கருத்துக்களைக் கையாள அடிக்கடி இணையத்தைத் தொடர்புகொள்ள ஒரு கணினியும், இணைய இணைப்பும் , அதற்காகும் செலவைச் சரிகட்ட ஒரு நிரந்தர பண உதவியும் தேவைப்படும். எனவே இதை பற்றிய ஒரு மனம் திறந்த உரையாடல் நமக்கு அவசியமாகிறது.

இப்போது, இதழ் வெளிவருவதில் இருக்கும் அனைத்து படிநிலைகளையும் பட்டியலிட்டோமானால் இது இன்னும் தெளிவாகும்
1. படைப்புகளை சேகரித்தல்
2. வெளியிடுவதற்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
3. கணினியில் உள்ளிடுதல்
4. பிழைகள் திருத்துதல், சரி பார்த்தல்
5. அச்சிடுதல்
6. வாசகர்களுக்கு அனுப்புதல்

இந்த படிநிலைகளில் சில மாற்ற்ங்களைச் செய்தால்
1. படைப்புகளை சேகரித்தல்
2. வெளியிடுவதற்கான படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல்
3. தேர்தெடுத்த எழுத்துருவில் (font) கணினியில் உள்ளிடுதல்
4. பிழைகள் திருத்துதல், சரி பார்த்தல்
5. a. அச்சிடுதல் b. இணையத்தில் (தேர்ந்தெடுத்த சில படைப்புகளை) உள்ளிடுதல்
6. வாசகர்களுக்கு அனுப்புதல்
இதற்கப்பால் வாசகர்களின் கருத்துக்களை (feed back) கையாள்வதைப்பற்றி நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது. இதற்கு எனக்குத் தெரிந்த வரையில் சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன.

1. இதழுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியை வைத்துக்கொண்டு அதன் வழியாகக் கருத்துக்களைப் பெறுதல்
2. வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வழியாகக் கருத்துக்களைப் பெறுதல்
3. வாசகர்களிடமிருந்து நேரடியாக கருத்துக்களை இதழில் பெறுதல் (யாஹூ குழுமங்களில் இது எளிது. ஆனால் இலவச வலைப்பூ / வலைத்தளங்களில் இது சிறிது கடினம்.)

நான் உங்களை அதிகம் குழப்பி விடவில்லை என்று நம்புகிறேன்!! இதனை எளிமையாக்க வேண்டுமெனில் நாம் ஒரு குழுவாகச் செயல்பட்டு நமக்குள் சில கடமைகளைப் பிரித்துக் கொள்ளலாம். இணையத்தில் வெளியிடும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். இதழை அச்சிட்டு முடித்தபிறகு , மின்வடிவிலிருக்கும் இதழை எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதனை நான் இணையத்தில் வெளியிடத் தயாராயிருக்கிறேன். இதழின் படைப்புகள் மீதான எதிர்வினைகளை / படைப்புகளை அதே மின்னஞ்சலில் பெற்று, அதனை காகிதத்தில் print எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு சோதனை முயற்சியாக சென்ற பயணம் புதிது இதழிலிருந்து சில கட்டுரைகளை (நாங்களே ஏழெட்டு நாட்களாய் type செய்து) ஓடையில் வெளியிட்டோம். அவை நல்ல வரவேற்பை பெற்றன என்பது நமக்கு மிக்க ஊக்கத்தை அளிக்கிறது. இது நாம் சில மாற்றங்களுத் தயாராக வேண்டியதன் அவசியத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

சென்றமுறை நாம் சந்தித்தபோது கிராமத்திலிருந்து வெளியேறி நகரமயமாதலுக்குள் உழன்று கொண்டிருக்கும் என்போன்றவர்களின் அனுபவங்களை எழுத வேண்டும் என்று நீங்கள் சொன்னதைப் பற்றியும் நான் யோசித்து வருகிறேன்.
நல்ல படைப்புகள் கவனம் பெற வேண்டும் என்பதில் உங்களோடு எனக்கும் உடன்பாடே.

அதற்கு நமது புதிய வழிமுறை வாசலாயிருக்கும்

–கைகாட்டி

மழை 4 துளி 7 : கனவு (மட்டுமே) காணுங்கள்

மழை 4 துளி 7

கனவு (மட்டுமே) காணுங்கள்  – ம. ஜெயப்பிரகாஷ் வேல்

(நன்றி: பயணம் புதிது ஜன-பிப் 2004 )

“வேலையே அதன் விருது. இந்தியச் சூழலில் அறிவியல் துறைக்கு முற்றிலும் பொருந்தும். ஏனெனில் இங்கு வேறெந்த வகையிலும் எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கப் போவதில்லை ” -ஹேது.சி.ஷேத் (டிசம்பர்-1999 -கரன்ட் சயன்ஸ் இதழ் )

“இப்போது மாணவர்களிடயே விஞ்ஞானக் கல்வி நாட்டம் குறைந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானப் பட்டதாரிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன்னால் விஞ்ஞானக் கல்வி படிக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டினர். திறமையான மாணவர்கள் விஞ்ஞானக் கல்வியை ஏன் விரும்புவதில்லை என்று ஆய்வு நடத்த வேண்டும். விஞ்ஞானக் கல்வி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். விஞ்ஞானத்தில் முனைவர் பட்டம்(Ph.D) பெற்ற இந்தியர்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கவரத் தொடங்கி உள்ளன. அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் ” – பிரதமர் அ.பி.வாஜ்பாய் (புது தில்லியில் ஸ்வரூப் பட்நாயக் விருது வழங்கிப் பேசுகையில்; புதுதில்லி. ஜூலை-3-2003; தினத்தந்தி)

கல்வி

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அறிவியல் முன்னேற்றம் ஒரே நாளில் வந்துவிடாது. அலாவுதீனின் அற்புத விளக்குக்கு நாம் ஆசைப்படவும் கூடாது. ஒரு வளரும் நாடு வளர்ந்த நாடாவதற்குத் தற்சார்புடைய அறிவியல் முன்னேற்றம் பெரும் காரணியாக விளங்குவதால், இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது. அத்தகைய தற்சார்புடைய அறிவியல் முன்னேற்றத்திற்காக அடிப்படையில் இருந்தே வலிமையாக ஆரம்பிக்க வேண்டியதாக உள்ளது. நமது கல்வி முறையில் அறிவியலைக் கற்கும், கற்பிக்கும் முறைகளில் பெரும் மாறுதல்கள் தேவை. சுண்ணாம்பு நீரை பால்போல மாற்றும் வாயு கார்பன் டை ஆக்சைடு என்பதை அசோகர் மரம் நட ஆரம்பித்த காலத்திலிருந்தே

கற்பித்து வருகிறார்கள். மாணவர்களும் ஐந்து மதிப்பெண்களுக்காக அதை மனப்பாடம் செய்து எழுதுகிறார்கள். கல்வித்துறையில் புதிய அறிவியலை, தற்கால அறிவியலைப் புகுத்த வேண்டும். பாடத்திட்டங்கள் நிகழ்கால அறிவியலைப் பிரதிபலிப்பவையாக இருக்க வேண்டும். ஏனெனில் முன்னேற்றம் என்பது நன்கு தயார்படுத்தப்பட்ட மனங்களின் வலிமையான கரங்களிடம் உள்ளது. கற்பிப்பவர்களும், புத்துப்புது அறிவியல் முன்னேற்றங்களையும் மாறுபட்ட கருத்துக்களையும் மாணவர்களுக்கு அறிமுகம் செய்து ஆர்வமூட்டுபவர்களாக இருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சம்பளத்திற்காகக் கற்பிப்பது, மதிப்பெண்களுக்காகப் படிப்பது என்ற மனோபாவம் மாற வேண்டும்.

அங்கீகாரம்

அறிவியலின்பால் அதீத ஆர்வம் மட்டும் நல்ல முன்னேற்றத்தைத் தந்துவிடாது. அதனை ஏற்றுக் கொள்கிற ஆரோக்கியமான சூழலும் அதற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கிறபோதுதான் அதன் உண்மைப் பலனை அடைய முடியும். மக்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறைய வேண்டும். காலையில் பல்துலக்கி இரவில் இமைமூடித் தூங்கும் அளவுக்கு அவர்களும் மனிதர்கள்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். அறிவியல் மந்திரம் போன்றதல்ல; மக்களுக்கானது என்பதை அறிவியலாளர்களும் தெளிவுபடுத்த வேண்டும். செய்தி ஊடகங்களின் பலத்தை அறிவியல் துறையினர் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றின் அறிவியல் முன்னேற்றங்களும் புதிய தொழில் நுட்பங்களும் எல்லோரையும் சென்றடையும் வண்ணம் செய்ய வேண்டும். அரசின் விரிவாக்க மையங்கள் இவற்றின் நேரடிப் பயன்பாட்டிற்குப் பாதையாக இருக்க வேண்டும்.

அரசும் அறிவியல் உலகமும் நெருங்கி வரவேண்டும். ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். நிதி ஒதுக்குவது – ஆய்வு முடிவுகள் பெறுவது என்ற நேர்கோட்டில் கடிவாளமிட்ட குதிரையாய்ப் பயணம் செய்வது பலன் தராது. கொள்கையளவிலான புதிய முடிவுகளைக் கூட்டாகச் சேர்ந்து நிர்மாணம் செய்து அதை நோக்கிச் செயல்பட வேண்டும். நிதியுதவி பெறுவது, விருதுகள் அளிப்பது பரிசுகள் வழங்குவது போன்றவற்றில் தனிநபர் செல்வாக்கு தவிர்க்கப்பட வேண்டும். உண்மையான உழைப்பு அங்கீகரிக்கப்படும்போதுதான் அது தன் உண்மையான பலனை அடைகிறது. எனவே விருதுகளும் கவுரவங்களும் முறையானதாக இருக்க வேண்டும்.

நிதியுதவி

நமது நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான ஆய்வுகளுக்கு அரசே நிதியுதவி அளிக்கிறது. நாட்டின் மொத்த வளத்தையும் இதிலேயே முடக்க முடியாது. நிதியுதவிக்கான அரசின் கொள்கைகள், ஆய்வு நாட்டம் ஆகியன உள்நாட்டு தொழில் முனைவோர்களிடம் வரவேற்பைப் பெறுவதாக அமைதல் அவசியம். அரசு, நம் இந்தியச் சூழலுக்கு உகந்ததாக, நேரடிப் பயன்பாட்டை நல்குவதாக அமையும் ஆய்வுகளை ஊக்குவிக்க வேண்டும். எந்தவொரு அறிவியல் முன்னேற்றமோ புதிய தொழில் நுட்பமோ தொழிற்புலத் தேவைகளை நிறைவு செய்வதாக அமைதல் நலம் பயக்கும். எனவே ஆய்வுகளுக்கான நிதியுதவிகளில் உள்நாட்டுத் தொழில் முனைவோர்களுடைய பங்களிப்பும் தேவையாக இருக்கிறது. தொழில் முனைவோர்களிடம் கட்சி வளர்ச்சி நிதி வசூலிப்பதை விடவும் அவர்களை ஆய்வுப் பங்களிப்புக்கு உதவச் செய்வது நாட்டின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்தும் என்பதை அரசை நிர்வாகம் செய்பவர்கள் உணர வேண்டும்.

வாழ்வியல்மேம்பாடு

அறிவியல் புலத்தில் ஆய்வு மேற்கொள்ளுபவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்தில் கவனம் நிறைய செலுத்த வேண்டும். நிறைய புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், குறைந்தபட்ச வயதுவரம்பைத் தளர்த்துவதும் மற்றும் உலகளாவிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஆய்வு மேற்கொள்ள நடத்தப்படும் தகுதித் தேர்வுகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு வேலை உறுதி செய்யப்பட்டால் நிறைய மாணவர்கள் வெளியேறுவது குறையும்.

பதிப்புத்தரம்

இந்திய ஆய்விதழ்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும். நமது அறிவியலாளர்களும் முக்கியமான ஆய்வு முடிவுகளை உள்நாட்டு ஆய்விதழ்களில் வெளியிட முன்வர வேண்டும். தன் வாழ்நாளில் சர்.சி.வி ராமன் சுமார் 15 கட்டுரைகளை மட்டுமே வெளிநாட்டு ஆய்விதழ்களில் வெளியிட்டுள்ளார். மீதமுள்ள 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் உள்நாட்டு இதழ்களில் வெளியிடப்பட்டவை. பதிவு செய்யப்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை, புதிய தொலைநுட்ப அறிவுகளைப் பயன்படுத்த , எளிதானவைகளாக மாற்ற , உலகளாவிய ஒருங்கிணைப்பு தேவை. காப்புரிமை இந்த இடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வுக்குரிய செய்முறைகள் சிலவும், குறிப்பிட்ட சில பொருட்களும் காப்புரிமை பெறப்பட்டு அவற்றின் தடையற்ற உபயோகம் தடுக்கப்பட்டுள்ளது. (இது குறித்த விரிவானதொரு கட்டுரை டிசம்பர் 2003 ‘உயிர்மை’ இதழில் வெளிவந்துள்ளது.)

ஆய்வுகளின்முக்கியத்துவம்

மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் நம் நாட்டுக்கு பயனளிப்பவையாக இருப்பது அவசியம். அணுகுண்டுகள் சொந்தமாக தயாரித்து வெடித்தும் விட்டோ ம். அதனால் பெரிதாக ஒன்றும் ஆகிவிடவில்லை. பதிலுக்கு பாகிஸ்தானை அணுகுண்டு தயாரிக்கத் தூண்டியுள்ளோம். நமது நாட்டுக்கு என்ன தேவையோ, நம்மால் எதை நன்றாகச் செய்ய முடியுமோ அதை நமக்கேயுரிய தனித்துவத்துடன் செய்தால் அறிவியல் உலகில் மிளிரலாம். அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. செயற்கைக்கோள் ஏவுவதை விடவும், அடுத்த நாட்டுக்குக் கார் செய்து அனுப்புவதை விடவும் நம்மால் விவசாயத்துறையில் நிறையச் சாதிக்க முடியும். பேராசிரியர் ஜோஸ் சோல்டம்பர்க் (பிரேசில்) அவர்களின் “நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இருக்கும் அறிவியல் முன்னவர்கள் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் ஆய்வு மாதிரியைப் பின்பற்றுவதை விடவும், நமது சொந்த, உள்நாட்டுச் சூழலுக்கு தகவமைத்துக் கொண்டு தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் கல்வித்துறை, அரசு மற்றும் தொழில்துறைக்கான வளர்ச்சிகளை உருவாக்க வேண்டும். முன்னேற்றத்தின் முதல்படி இதுதான் ” என்ற கருத்து கவனிக்கத்தக்கது,

இவரின் கருத்துக்கு விரிவான ஆதாரம் உதாரணமாக உள்ளது. பிரேசில் அடிப்படையில் விவசாய நாடுதான். முக்கியமாய் கரும்பு. அவர்கள் கரும்பிலிருந்து குறைந்த செலவில் ஆல்கஹால் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும், அதை பெட்ரோலிய எரிபொருட்களுக்கு மாற்றாக உபயோகிக்கும் முறைகளையும் உருவாக்கினர். தற்போது அந்த நாடு தன் எரிபொருள் தேவையில் சரிபாதிக்கும் மேலாக ஆல்கஹாலைக் கொண்டு பூர்த்தி செய்து கொள்கிறது. தற்போது வளர்ந்த நாடுகளில் கூட வெற்றிகரமாக இல்லாத அந்த மாற்றுவகை தொழில்நுட்பத்தை முற்றிலும் உள்நாட்டு விஞ்ஞானிகளால் உள்நாட்டிலேயே சாத்தியமாகக் காரணம் அவர்களின் பாரம்பரிய வளம்/பலம் புரிந்துகொள்ளப்பட்டு சரியான முறையில் அணுகப்பட்டதே ஆகும்.

ஆய்வுகளில் அடிப்படையான சுகாதாரப் பிரச்சினைகளுக்கும், ஆதாரமான விவசாயத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். செல்போனில் எதிர்க்குரல் தெளிவாகக் கேட்பதை விடவும் நிமிடத்துக்கு நான்கு பேரைக் கொல்லும் காசநோயைக் குணப்படுத்துவது அவசியம், அவசரம்; அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்குகளில் அதிகம் விழுந்து கிடப்பது இந்தியர்கள்தான் என்பதைவிடவும் மழை பொய்த்து, கருகும் பயிர்களும், வெடிக்கும் நிலங்களும் காக்கும் உழவர்களின் நிலை உணர்ந்து நோக்கத் தக்கது.

உள்கட்டமைப்பு

பல்கலைக்கழகங்கள் கல்விக்கூடங்கள் ஆய்வு நிறுவனங்கள் முதலியன 3*, 5* முதலான பலவகைக் குறியீடுகளால் தரப்படுத்தப்பட்டுள்ளன. இந்தத் தரவரிசைகளின் நோக்கம் தலைகீழாகி விட்டது. தரவரிசையில் மேலே உள்ள நிறுவனக்களுக்கு அரசு அதிக அளவில் நிதியுதவி அளிக்கிறது. கீழ்நிலையில் உள்ள நிறுவனங்களின் கண்ணில் சுண்ணாம்பு வைக்கிறது. மாறாக, கீழ்நிலையில் உள்ள நிறுவனங்கள் அதிக நிதியுதவியுடன் தரத்தில் மேம்பட உதவ வேண்டும். மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை(DST) FIST போன்ற நடவடிக்கைகளால் ஆய்வு நிறுவனங்களின் குறிப்பிட்ட துறைகளை மேம்படுத்தி வருகிறது. இவற்றை வளராத நிறுவனங்களின் துறைக்கும் புகுத்த வேண்டும்.

சில அவசியமான, விலையுயர்ந்த கருவிகளைப் பயன்படுத்தவும், சிக்கலான செய்முறைகளைச் செய்யவும் மத்திய அரசு, மண்டலம் வாரியாக RSI (Regional Sophisticated Instruments Counter) எனப்படும் அமைப்புகளால் உதவி வருகிறது. இவற்றை மேலும் விரிவுபடுத்தி நிறைய ஆய்வு நிறுவனங்கள் பயன்பெற ஏதுசெய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் ஆய்வு மையங்களிடையே கருத்துப் பரிமாற்றம் பரஸ்பர ஒத்துழைப்பு அமைய வேண்டும்.

அமைப்பு

அரசு நிறுவனங்களின் அதிகார அடுக்குகள் மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நிதி வழங்குவது, பயன்பாடு முதலியன எளிமையாக்கப்பட வேண்டும். ஆய்வு மாணவர்களின் நலன் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆய்வுக்களத்தில் நேரடியாக நின்று செய்பவர்கள் மாணவர்கள்தான். அவர்களுக்குச் சம்பளம், பட்டம் முதலியன முறையாக வழங்கப்படுவது அவசியம். நிதியாதாரப் பயன்பாடுகளை எளிதாக்கும் அதே வேளையில் அவற்றின் முறையான உபயோகம் குறித்த சரியான கண்காணிப்பும் தேவை. ஆய்வுப்பணிகளின் இடைக்கால முன்னேற்றம், முடிவுகளின் நம்பகத்தன்மை, அவற்றின் பயன்பாடு முதலியன கவனமாக , கடுமையாகப் பரிசீலிக்கப்பட வேண்டும்.

பெரும்பாலான அரசுத்துறைகளைப் போலவே அறிவியலிலும் அமைப்புக் குறைபாட்டால்தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது. தொடர்ச்சியற்ற நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாகக் குளறுபடிகளால் திரு மேனன் தலைமையில் கோலார் தங்கவயலில் நடத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் பாதியில் நிறுத்தப்பட்டன. அது சம்மந்தமான முழுமையான ஆய்வுகளை மேற்கொண்ட ஜப்பான் விஞ்ஞானிகள் அதற்காக நோபல் பரிசும் வென்றனர். பசுமைப் புரட்சி காலங்களில் உரம், பூச்சிமருந்து போன்றவை சரியான முறையில் விநியோகிக்கப்படாததும் அறிவியல் பூர்வமான கருத்துக்கள் சாதாரண மக்களைச் சென்றடையாமல் போனதும் நிர்வாகச் சீர்கேடுகளின் சாதனையே.

தமிழக அரசின், ‘மகளிருக்கான உயரிய தொழில் நுட்பப் பூங்கா’ அறிவிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆகியும் முழுப்பயன்பாட்டிற்கு இன்னும் வரவில்லை. உலகில் வேறெங்கும் உள்நிறுவனங்களோ கிளைகளோ இல்லாத உலக வங்கி சென்னையில் அலுவலகம் துவக்க உதவியதில் இருந்து – வாடகைக் கட்டிடத்தில் வாடியவர்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட நிலம் ஒதுக்கியது வரையில் எல்லாம் துரிதமாக நடக்கின்றன.

இந்திய மாணவர்கள் வெளிநாட்டுக்குப் போய்விடுவது பற்றி இங்கே கவலைப்படும் பிரதமர் அமெரிக்காவில் NRI-க்களின் முதலீடுகளுக்கான விருந்தில் கலந்து கொள்கிறார். எல்லா வளமும் உள்ளது. இயற்கை வளம், மக்கள் வளம், அறிவு வளம் என எதிலும் குறைவில்லை. முன்னேற்றத்துக்கான உண்மையான நோக்கமும், சரியான உழைப்பும் கைகோர்க்கும்போது அறிவியல் உயரும். நாடும் நிமிரும்.