மழை-8, துளி-19 : மாற்றுச்சாவி

மாற்றுச்சாவி
யாரும்
யாருக்குள்ளும்
நன்றாக இல்லை
அடுத்தவனைப் பற்றிய தப்பெண்ணம்
தப்பாக்குகிறது –
அவனவனையும்
முகம் சிரிக்கும்
அகம் கறுக்கும்
புத்தி கூறுபோடும்.
நெருங்கிவரக் கை கோர்க்கையில்
விரல்கள்
வேறுபாடு பேசும்.
கட்டிப்பிடித்துப்
பாசம் பரிமாற
மனசு குத்தும்.
சாதனையைப் பாராட்ட
எத்தனிக்கும்போது
பீறிட்டெழும் பொறாமை
குரல்வளையை நெரிக்கும்.
பெரியவனாய்
காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் எண்ணத்தில்
மனிதச் சங்கிலி அறுபடும்.
நம்பிப் படகேற
நட்டாற்றில்
துடுப்பொடியும்
எச்சரிக்கையாய்
தெரிந்து வைத்துக்கொள்
நீச்சல்
எதற்கும்
எல்லாவற்றுக்கும்.
—–சகாரா
நன்றி: முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

மழை-8, துளி-17 : ஓ

-கைகாட்டி
எல்லாம் முடிந்து
ஏதுமற்ற உலகத்தில்
என்னுடய அரசாட்சி
நடத்தல் வேண்டும்.
உலகத்தின் புதிய விடியலை
நானே தீர்மானிக்க வேண்டும்.
காற்றோ, நீரோ, மழையோ
எதுவாயினும்
என்னுடைய ஆணைக்குப்
பணிதல் வேண்டும்,
என்னிலும் புத்திசாலி
எவனுமில்லையென
இறுமாந்திருந்தபோது
கெக்கலித்து,
சிறகடித்துப் போனதொரு காகம்,
தன் எச்சத்தை
என் தலையில் இட்டபடி.

 

மழை-8, துளி-16 : ஒரு சொட்டு ஏக்கம்

ஒரு சொட்டு ஏக்கம் – சகாரா
எங்கு பார்த்தாலும்
இனிப்பு, பழங்கள்
ஈகோ-
இரத்தத்தில் சர்க்கரை.
எங்கு சென்றாலும்
என் தாயின் தரிசனம்
நான்
ஏமாற்றத்தின் பிள்ளை.
நல்லது
கெட்டது
வடிகட்டிய(வன்)
முட்டாள்
மண்டையைப் போட்டு
உடைத்துக் கொண்டிருந்தபோது
செத்தவனுக்கும் மூளை
உயிரோடிருக்கையில் வாழவிடாதே
செத்தபிறகு கொடு
மரணத்துக்குப் பிந்தைய விருது
ஈரமண் கிளறி
படுத்ததும் தூங்கிப்போனது நாய்.
பக்கத்தில்
பொறாமையோடு
நான்

நன்றி:  முள்ளின் நுனியிலும் ஆகாயம் கவிதைத் தொகுப்பு

மழை-8, துளி-14 : கருப்பை செய்யும் அம்மா

 கருப்பை செய்யும் அம்மா

வெந்த கருப்பையை
அம்மா கழற்றி வைத்திருந்தாள்.
நமுத்த விறகு
ஊதலுக்காய்க் காத்திருந்தது.
இட்லி எட்டணா, தோச ஒர்ருவா,
பணியாரம் நாலணா…
பள்ளிக்கூடத்துப் புள்ளய்ங்க வந்தாக்குடுன்னு
சொல்லிவிட்டு
அம்மா தண்ணீர் பிடிக்கச் சென்றிருந்தாள்.
முதன்முறையாக அடுப்பை ஊதினேன்.
அடிவயிறு பத்திக்கிட்டு எரியுதுடா என்ற
அம்மாவின் குரல் ஞாபகம்
என் அடிவயிறைப் பற்றச் செய்தது.
மடியில் கிடத்தி, தலை வருடி
உறங்கச் சொல்லிய இரவொன்றில்
என்னைச் சுற்றி கருப்பை செய்துகொண்டிருந்தாள்
அம்மா,
உறங்காது விழித்தபடி.
-முனி, திண்டுக்கல்
நன்றி: ‘பயணம் புதிது’, ஜூலை-ஆகஸ்ட்-2006

மழை-8, துளி-13 : கூடு

கூடு – புலியூர் முருகேசன்

குறைப் பிள்ளையாய்
தூக்கணாங்குருவி கட்டிய கூடு
இங்குமங்கும் அலையும்
 
வந்த குருவியின் அலகில்
நாலைந்து காய்ந்த வைக்கோற் பிரியோ,புல்லோ
 
நெல் கொத்தினாலும்
நீர் குடித்தாலும்
உயரப் பறந்தாலும்
குருவிக்கு
பொழுதுக்கும் குறையாய்க் கிடக்கும்
கூட்டின் மேல் ஞாபகங்கள்.
 
எனவே… எங்கு எதன் மீது
எந்த திசைமீது நின்றாலும், பறந்தாலும்
கண்ணுக்குத் தெரிபவை
காய்ந்த புற்களே!