மழை-8, துளி-13 : கூடு

கூடு – புலியூர் முருகேசன்

குறைப் பிள்ளையாய்
தூக்கணாங்குருவி கட்டிய கூடு
இங்குமங்கும் அலையும்
 
வந்த குருவியின் அலகில்
நாலைந்து காய்ந்த வைக்கோற் பிரியோ,புல்லோ
 
நெல் கொத்தினாலும்
நீர் குடித்தாலும்
உயரப் பறந்தாலும்
குருவிக்கு
பொழுதுக்கும் குறையாய்க் கிடக்கும்
கூட்டின் மேல் ஞாபகங்கள்.
 
எனவே… எங்கு எதன் மீது
எந்த திசைமீது நின்றாலும், பறந்தாலும்
கண்ணுக்குத் தெரிபவை
காய்ந்த புற்களே!

 

மழை-8, துளி-10 : பார்வைப் பருந்து

பார்வைப் பருந்து – புலியூர் முருகேசன்

காமம் தொடாமல்   முகம் மட்டும்
கொத்தித்   தின்னும் என் பார்வைப் பருந்து
அழுகல் தொடாது; காயம் படாமல்
பூவைக்   கொத்தும்
ஒரு நாளில் ஒரு   பொழுதில் ஒரு நொடியில் மட்டும்
கோடிக் கொத்தல்களில் எல்லாப் பசியும் அடங்கும்.
உயிர்ப் பசி   மட்டும் விழித்துக் கொள்ளும்.
நெடுந்தூரம்   சிறகு கிழியப் பறந்து வந்து
உயிர் சிதற   வெருண்டு வந்து
கொத்தப் போகும்   நொடிப் பொழுதில்
பூ முகம்   திருப்பிக் கொள்ள
அறுந்து விழும்   என் உயிர் மின்னல்;
கொத்தல்களும்.

மழை-8, துளி-4 : முட்களே நமக்கானவை

மழை-8, துளி-4

முட்களே நமக்கானவை – புலியூர் முருகேசன்

நீர்த்துளி நிறைந்த பொய்கை

கல்பட்டால் உடைந்திடாது;

விரிசலாய் மனம் தெரியும்

யார் விட்ட கல்லினாலோ?

மெல்லவே நிஜங்கள் புரியும்;

மலர்கள் நமை நினைப்பதில்லை

பூப்பது அவையின் இஷ்டம்.

முட்களே நமக்கானவை.

நிழல்களை கரைத்துப் போகும்

கடல் அலை வீசும் கைகள்

நிஜங்களை முடமாக்கி விடும்

நடுநிசி கனவுப் பாரம்;

வழிந்தோடும் விழியின் ஓர

வசந்தத்தின் மூச்சுக் காற்று,

எப்படி உயிர்த்து எழுவேன்

என்குடல் சருகாய்க் கருக.

 

மழை-8, துளி-1: கலையாத ஒப்பனைகள்

மழை-8, துளி-1:       கலையாத ஒப்பனைகள்

 நான் முழு மனிதனில்லை –

எனக்குள்ளும் பொய்கள் உண்டு

மெல்லிய புழுக்கள் போல

மனதுக்குள் நெளியும் வன்மம்

 I’m n’t perfect-

I too have lies inside !

Like the thin worms all around

The spite crawls in my mind ! 

கரகரவெனும் குரலில் ஓயாது

காமம் சப்தம் போடும்

வெளியிலே கேட்கா தந்த

வேஷமாய்ப் புனைந்த ஓசை

Raising the tone restlessly,

The Lust clamours hoarsely !

None can hear it out

The Voice which is disguised !

அவலங்கள் நேரில் கண்டால்

என் மனம் பொத்திப் போகும்

எனக்கொரு துன்பம் என்றால்

அணைத்திட ஆட்கள் தேடும் !

                  -அம்ரிதா

 

If any distress near

Quickly mind closes the shutter !

If I’m at misery

It searches the best intimacy !

   – Translated by  Sahara

 

 நன்றி: ‘முள்ளின் நுனியிலும் ஆகாயம்’ கவிதைத் தொகுப்பு

மழை-7, துளி-5 : எங்கோ பிறந்திருக்கிறாய்

மழை-7, துளி-5

எங்கோ பிறந்திருக்கிறாய்  – புலியூர் முருகேசன்

யாரையும் அடிக்காத கமலம் டீச்சரின் பிரம்பும்,

காரைபெயர்ந்து மண்புழுதி அடிக்கும் ஒண்ணாம் வகுப்பும்

மழைவாசம் அடிக்கும் சிலேட்டுப் பென்சிலும்

மூக்கொழுக போட்டியாய் படிக்கும் சோமசுந்தரமும்,

துவைத்த சட்டையும் கிழியாத டிரவுசரும்,

மிளகாய்ப் பொடி தூவி நவாப் பழம் விற்பவரும்

பத்து பைசாவிற்கு பெட்டி திறக்கும் ஐஸ்காரரும்

‘அ’ எழுதத் தெரியாமல் ஒண்ணுக்கிருந்த சிவலிங்கமும்,

பள்ளிக்குப் போகும் வழியில் அண்ணா மன்றமும்

நொண்டியும் கபடியும் குண்டு விளையாட்டும்

உரச்சாக்குப் பையில் இலவசப் புத்தகமும்

வறுத்த அரிசியும், வெல்லக் கட்டியும்

இரண்டாம் வகுப்புப் படிக்கும் தாஸ் அண்ணனும்

‘மழை வருது மழை வருது நெல்லல்லுங்கோ’ பாட்டும்

எனக்கு அறிமுகமான அதே பொழுதுகளில்-

எங்கோ பிறந்திருக்கிறாய்

சக பயணியாய்….

(ஆனந்த விகடனில் வெளியான கவிதை)