மழை-2 துளி – 30 : விடியாத கிராம வாசல்

மழை-2 துளி – 30

விடியாத  கிராம  வாசல்புலியூர்  முருகேசன்

சுள்ளிக் காடும், சுடலைக் கருப்பனும்
எல்லா ஊரைப் போல் எங்க ஊரிலும் இருக்கு;
” அப்போல்லாம் நெறய தண்ணி கெடக்கும் ”
வறண்ட கிணறு பார்த்து பழம்பெருமை பேசும் பெரிசுகள்;

ஒண்ணுக்கிருக்க ஒதுங்க இருந்த பள்ளிக்கூடம்,
எவன், எவ செத்தாலும்  அழுவாம நிற்கும் ஆலமரம் ;
இப்படியாக நிரந்தரச் சொத்து நெறய இருக்கு.

வருசத்துக்கொருதரம் ” திருளா ” வரும்;
வருசத்துக்கொருதரம் வரும் பஞ்சம் போல
பிரம்பொடித்து காவடி தூக்கி பொய்ச்சாமி ஆடும்
பாட்டனார் ” எல்லாரையும் காப்பாத்த நானிருக்கேன் ” என்பார்;

அந்த வருசமும் மூளைக் காய்ச்சலில்
அஞ்சாறு மண்டையப் போடும் .

” அக்கா செத்துப் போனா என்ன ! நாற்பது வயசு
மாப்பிள்ளைக்கு பதினாறு வயசு கொளுந்தியாளக் கட்டிவை. ”
சவம் காடு போவதற்குள் ஊர்ப்பெரிசுகள் ஊளையிடும்,
தத்தம் பெண்டுகளை குச்சுக்குள் தள்ளி கதவடைக்கும் ;

கம்மங்காட்டுக்குள் கல் பொறுக்கும்போது
இளசுகள் தும்மிக் கொண்டால் கூட
” தேவிடியா, பொசகெட்டவன் ” பட்டம் தரும் அம்மணிகள்;
பஞ்சம்  அடித்ததில் ஊர்விட்டுப் போனவனை
இன்னும் எச்சில் ஒழுக மென்று துப்பும்.

கிராமமும் வெள்ளை!
மனசும் வெள்ளை!

Leave a comment