மழை-2 துளி – 36 :எனக்கான நீ

மழை-2 துளி – 36

செந்தில் அரசு

எனக்கான நீ

உன் மவுனப் பாறைகளை
வெடி வைத்துத் தகர்க்க
விரும்பவில்லை நான்.
மலைகளின் சிறப்பே
மவுனமாக நிற்பதுதான்.
என்னை இன்னும் செதுக்கிவிட்டு
உனக்கான உளியுடன் வருவேன்
அப்போது பிறப்பாய்
எனக்கான நீ.

பயணம்

இயலாதவர்களுக்கு இருக்கைகள் தந்து
பலர் உதவப் பார்த்திருக்கையில்
முள்ளாய்க் குத்தினாலும்
எழச் சொல்ல மறுக்கிறது
பாவி மனது
பக்கத்தில் நீ.

மழை-2 துளி – 35 : புனைவு முகங்கள்

மழை-2 துளி – 35

புனைவு முகங்கள்திலகபாமா,சிவகாசி

துளியினும் துளியாய் மகரந்தம்
விதையாகி கனியாகிப் பின்
விருட்சமாய் காணக் கிடைத்தலாய்
காண முடியா அகங்கள் தனை
காணச் செய்தது முகங்கள்
அருவமாய் இருந்த அகங்கள்
உருவமாய் உணரச் செய்த முகங்கள்

உணர்வுகளால் வேறுபட்ட
உன்னிலிருந்து எனையும்
என்னிலிருந்து உனையும்
குறிப்பெடுத்துக் காண்பிக்கும்
குளோனிங் இல்லா முகங்கள்

முற்போக்கு எண்ணங்கள்
முதுகு வளைய சுமந்திருந்தும்
பின்னோக்கித் திரும்பியிருக்கும் முகங்கள்

தன்னை, கலைஞனாய் பாவனை செய்து
கவி முகம் மூடி
மனித முகம் மறந்து,
மரத்துப் போன முகங்கள்

முகம் காட்ட மறுத்த
முகங்கள் தவிர்த்து
அடிக்கடி தோன்றிப் போகும்
பாவனை முகங்கள்

சீதையை வேண்டும் கோவலன்கள்
ராம பாவனை முகங்கள் மூடி
மாரீச மான்களை ஏவும்

பாரதியாய் காட்டிக் கொண்ட பாவனை முகங்கள்
கண்ணம்மாவை காதலித்து தினம்
செல்லம்மாவை பாராமுகம் செய்யும்

நிஜங்களின் கனங்களை சுமக்கத் திராணியற்று
கழற்றிவைத்த முகங்கள் பத்திரமாக பரண்களில்
பூட்டிக் கொண்ட பாவனை முகங்களோ
பல்லக்குகளில்.

தூங்கித் திரியும் மனிதரிடையே

விழித்து திரியும் முகமொன்று

தூங்குவதாய் பாவனையில் ..

பாவனை முகங்கள் பாதகமில்லை

எடுத்து மாட்டையில்

குழப்பங்களில் மனிதர்கள்

இனி நாம் வனைவோம்
நிர்பந்தங்களை நிர்க்கதியாக்கி
விழியால் ராவணன் விரட்டும் சீதைக்கும்
இலட்சுமணக் கோடு கிழிக்கும் கண்ணகிக்கும்
இந்திரனை கல்லாக்கிப் போடும் அகலிகைக்குமான
புனைவு முகங்களை

புனைவு முகங்களோ புதிய முகங்களோ
முகங்கள் எதுவாயினும்
சின்ன இதழ்கள் சிந்தும் சிநேக சிரிப்பினில்
மனிதம் உயிர்க்க வைக்கும்
மானுட முகம் சுமப்போம்

மழை-2, துளி-34 : வெற்றியின் பாதையில்…

மழை-2, துளி-34  :   வெற்றியின் பாதையில்… சித்ரா விசுவநாதன்

1.

உச்சியை அடைவதென்பது

உயர்ந்த விஷயம்தான் – என்றாலும்

ஏறி வந்த பிறகு –உன்னால்

எண்ணிக்கூடப் பார்க்கப்படாத

ஏணிகள் எத்தனை ?

உன் காலின்கீழ் மிதிபட்டு நசுங்கிய

உள்ளங்கள் எத்தனை?

கடந்து வந்த இன்னல்கள்

களையக் கைகொடுத்துத்

துணை நின்ற தோள்கள் எத்தனை?

என்றேனும் ஒரு நாள்

எண்ணிப் பார்த்ததுண்டா?

முள்ளின் படுக்கையாய்

மூடிக் கிடந்த பாதை – உன்

பாதம் பட்டவுடன்

பூக்களாய் மாறியதாகவா

பூரித்துப் போகிறாய்?

உற்றுப் பார் !

உன் பாதம் நடந்து செல்ல

தன் உடலையே பாதையாய்க்

கிடத்திக் கிடக்கிற

முகங்கள் தெரியும்.

உன்னை தீபமாய் எரியவிட்டு

அடியில் கருமையாய்த் தன்னை

ஒளித்துக் கொண்ட

தியாக மெழுகுவர்த்திகள்

உன் கண்ணில் படும்.

உச்சியை அடைவதென்பது

உயர்ந்த இலட்சியம் தான்!

தடுமாறித் தவித்து – நீ

தடுக்கி விழும்போதும்

தாங்கித் தூக்கிய கைகளைப் பற்றி

ஒரு நிமிடம்

பாசமாய்க் கண்பார்த்து

புன்னகைப் பூக்களைச் சேர்த்து

நன்றி சொல்லி விட்டுப்  போயேன்!

2.

நீ செல்லும் வழியில்

வட்டமிட்டுப் பறந்து வரும்

வண்ணத்துப் பூச்சியின்

சிறகில் வரைந்திருக்கும்

நிறங்கள் எத்தனை – நின்று கணக்கிட்டு

நெஞ்சில் பதித்துக் கொண்டு

நடந்து பார்!

அடைய ஆசைப்படும் உச்சியும்கூட

உனக்குப் பக்கமாய்த் தெரியும்.

காற்று உன் கால்களுக்கு

இறக்கை கட்டி விடும்.

உறுதியாய் ஒன்றை மட்டும்

உன்னில் பதித்துக் கொள்.

இடறி விட்டுச் செல்லும்

இதயமற்றவர்கள் குறித்து

இடிந்து போகாமல்

இமயமென நடைபோட

இயலும் என்றால்,

தொடுவானம் உன் எல்லை- தோழனே!

துணிந்து நட

உலக விளிம்பு வரை

ஒன்றாய்ப் பயணிக்கலாம்

மழை-2 துளி – 33 : இசையானவளுக்கு

மழை-2 துளி – 33

இசையானவளுக்கு  —கைகாட்டி

இவ்விரண்டு  வருடங்களில்
முகம்  பார்க்காது
முழுதும்  பேசி
முழுக்க  ந(நி)னைந்து
முதல்  சந்திப்பிலேயே
முடிச்சுப் போட்டது  அன்பு.

இலைகளை  மறைத்து
இதழ்கள்  விரித்துப்
பூத்துக்கிடக்கும்  புதுமலர்ப் பொழிவாய்
பார்க்கக் கிடைத்ததுன்
முகம்.

தொட்டில் விலக்கி
முகம் நுழைக்கையில்
கண்வெட்டி
‘களுக்’கென்று  சிரிக்கும்
சிறு தளிராய்ப்
பிடித்து  நிறுத்தியதுன்
புன்னகை.

கொடும்பசிக் காரனுக்குக்
கொடுத்த  உணவாய்
அடைத்துக்
காற்றுக்கும் வழியற்றுத்
துடிக்க வைத்ததுன்
பார்வை.

எங்கிருந்தோ
எழுந்தோடி வந்த
எண்ணற்ற சொற்கள்
ஒன்றை  ஒன்று  நெருக்கிய  போரில்
அடைத்து அடங்கி
அமிழ்ந்து போனேன்
மவுனத்தில்.

கைபிணைத்து
இதழ் விரித்துக் கொடுத்தவுன்
திடீர் முத்தத்தில்
திகைத்துத் திளைத்துப்
போய் விழுந்தேன்
வெளியின் துளிகளூடாய் .

சிறை தகர்ந்து
சிறகு முளைத்து
வரம்பற்ற வான்வெளியின் பால் வீதியில்
கை கோர்த்து
அளவியில்லாத, அலகு தெரியாத
அதீத பேரின்பத்தில்
கரைந்து கலந்து
போனோம் காற்றாய்  –
கால எல்லைகளின்
கரை  உடைத்து…

##(2002)

மழை-2 துளி – 32 : மலரட்டும் மனிதநேயம்

மழை-2 துளி – 32

மலரட்டும் மனிதநேயம்சித்ரா விசுவநாதன்.

எரிக்க வேண்டிய ராவணர்கள்
எத்தனையோ பேர் இருக்க
பொம்மை ராவணர்களை விடாமல்
எரித்துக் கொண்டிருக்கிறோம்.

எரிய வேண்டிய ராவணர்கள்
நிம்மதியாய் உலவிக்கொண்டிருக்க
அப்பாவி அணில்கள்
எரிந்து கொண்டிருக்கின்றன.

எரியட்டும் ராவணர்கள் – நான்
எதிரியில்லை சம்பிரதாயத்திற்கு
எரியும் ராவணர்களுடன் சேர்த்து
மனம் சுமக்கும் மதவெறி
இரத்தவெறி எரித்து விடுங்கள்.

எரிந்த சாம்பலில் இருந்து
பீனிக்ஸ் பறவையாய்
எழுந்து வாழட்டும்
மனித நேயம்.