திருவெம்பாவை பாடல் – 19

முந்தைய பாடல்கள்: 1 23456781112131415161718109

திருவெம்பாவை பாடல் – 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.  ———-[ 19 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று  உரைப்போம் கேள்
எம் கொங்கை  நின் அன்பர்  அல்லார்  தோள்  சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு  எழில் என் ஞாயிறு  எமக்கு ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

எங்கள் பெருமான் எங்கள்   தலைவனே!
உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொல்   புதுக்கும் எம் அச்சத்தால் ‘உன்   கைப் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பழமொழியை திரும்பவும் கூறுவது தேவை இல்லாதது   என்ற அச்சத்தால்,
உனக்கொன்று  உரைப்போம் கேள் உன்னிடம்   ஒன்று உரைப்போம், [தயை கூர்ந்து] கேள்
எம் கொங்கை  நின் அன்பர்    அல்லார்  தோள்  சேரற்க [உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம்],   உன் அடியவர் தவிர வேறு யாருக்கும் எங்கள் தோள் உரிமை ஆகாதிருக்கட்டும்
எம் கை  உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க எம் கை,   உனக்கான திருப்பணி அல்லாது,  வேறு எந்த   விதப் பணிகளும், [வேறு எவருக்கும் தொண்டு] செய்யாது இருக்கட்டும்.
கங்குல்   பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க இரவும்,   பகலும், எங்கள் கண்கள்  [ உன்னைத் தவிர ]   வேறு எதையும், எவரையும் காணாதிருக்கட்டும்.
எம் கோன். எங்கள்   தலைவனே!
இங்கு இப்   பரிசே எமக்கு நல்குதியேல் இவ்வாறான   நிலையை எங்களுக்கு வழங்குவாய் எனில்,
என் ஞாயிறு  எங்கு    எழில் எமக்கு ஏலோர்  எம்பாவாய் ஞாயிறு   எந்தத் திசையில் எழுந்தாலும், எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

பொருள்:

எங்கள் தலைவனே!

‘உன் கைப் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பழமொழியை திரும்பவும் கூறுவது தேவை இல்லாதது என்ற அச்சத்தால், உன்னிடம் ஒன்று உரைப்போம், [தயை கூர்ந்து] கேள்.

[உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம்], உன் அடியவர் தவிர வேறு யாருக்கும் எங்கள் தோள் உரிமை ஆகாதிருக்கட்டும்.  எம் கை, உனக்கான திருப்பணி அல்லாது,  வேறு எந்த விதப் பணிகளும், [வேறு எவருக்கும் தொண்டு] செய்யாது இருக்கட்டும். இரவும், பகலும், எங்கள் கண்கள்  [ உன்னைத் தவிர ] வேறு எதையும், எவரையும் காணாதிருக்கட்டும்.

எங்கள் தலைவனே!

இவ்வாறான நிலையை எங்களுக்கு வழங்குவாய் எனில், ஞாயிறு எந்தத் திசையில் எழுந்தாலும், எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

தத்துவ விளக்கம்:

அவனது அடியார்களுக்குத் தொண்டு செய்வதும்,  அவனது தாள் வணங்கியும், இரவும் பகலும் எப்போதும் அவன் நினைவாகவும், பார்க்கும் பொருளில் எல்லாம் அவன் தன்மையைப் பார்க்கும் நிலையையும்  அடைவதுதான் பிறவியின் பயன் ஆகும் என்பதை இப்பாடல் வழியாக உணர்த்துகிறார் மாணிக்க வாசகர்.

Leave a comment