திருவெம்பாவை பாடல் – 16

முந்தைய பாடல்கள்: 1 23456781112131415

திருவெம்பாவை பாடல் -16

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவணமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.  ——– [ 16 /20 ]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

முன்னிக் கடலைச் சுருக்கி  எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்  இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்  பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப் புருவம்
என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவு இலா எம் கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன் அருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

 

மழை மழையே !
கடலை  முன்னிச்    சுருக்கி  எழுந்து கடலை   அணுகி, அதன் நீரைச் சுருக்கி [மேகமாக மாறி ] மேலே எழுந்து,
உடையாள்  என்னத் திகழ்ந்து [ எம்மை   அடியவர்களாக] உடையவளான உமையின் மேனி போல கரு நிறமாக மாறி,
எம்மை ஆளுடையாள்    இட்டிடையின்
மின்னிப் பொலிந்து
எம்மை   அடியவர்களாகக் கொண்டுள்ள உமையின் சிற்றிடை போல மின்னி , பொலிவுடன் காட்சி   அளித்து,
எம்  பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித்
எம்   தலைவியாகிய உமையின் திருவடிகளில் இருக்கும் பொன்னாலான சிலம்புகளின் ஒலி போல இடி   இடித்து முழங்கி ,
திருப் புருவம்
என்னச் சிலை குலவி
அவளது   திருப்புருவம் போல் வளைந்த வான வில்லாகத் தோற்றமளித்து
நம் தம்மை   ஆளுடையாள் எம்மை   ஆள்கின்ற உமையானவள்
தன்னில்   பிரிவு இலா எம் கோமான்  அன்பர்க்கு தன்னைப்   பிரியாமல் இணைந்துள்ள எம் தலைவனான சிவனின் அடியவர்களுக்கு
முன்னி அவள்   நமக்கு  இன் அருளே முன் சுரக்கும் என்னப் அருகில்   வந்து, இனிய அருளைப் பொழிவது போல
பொழியாய்   , ஏலோர்  எம்பாவாய். நீ   பொழிவாயாக!

பொருள்:

மழையே !  கடலை அணுகி, அதன் நீரைச் சுருக்கி [மேகமாக மாறி ] மேலே எழுந்து, [ எம்மை அடியவர்களாக] உடையவளான உமையின் மேனி போல கரு நிறமாக மாறி, எம்மை அடியவர்களாகக் கொண்டுள்ள உமையின் சிற்றிடை போல மின்னி , பொலிவுடன் காட்சி அளித்து , எம் தலைவியாகிய உமையின் திருவடிகளில் இருக்கும் பொன்னாலான சிலம்புகளின் ஒலி போல இடி இடித்து முழங்கி, அவளது திருப்புருவம் போல் வளைந்த வான வில்லாகத் தோற்றமளித்து,  எம்மை ஆள்கின்ற உமையானவள், தன்னைப் பிரியாமல் இணைந்துள்ள எம் தலைவனான சிவனின் அடியவர்களுக்கு,  அருகில் வந்து, இனிய அருளைப் பொழிவது போல, நீ பொழிவாயாக!

தத்துவ விளக்கம்:

இங்கு சிவனின் அடியவர்களுக்கு உமையானவள் எவ்வாறு கருணைகாட்டி அருள் புரிவாள் என்பதை, மழையின் உவமை கொண்டு விளக்குவதோடு,  மழை எப்படி எல்லோர்க்கும் பொழிகிறதோ அவ்வாறே, இறைவனும் எல்லா உயிர்களையும் உய்விக்கும்பொருட்டு, தன் கருணையைப் பொழிகின்றான் என்கிறார் மாணிக்க வாசகர்.

Leave a comment