திருவெம்பாவை பாடல் – 20

முந்தைய பாடல்கள்: 1 2345678111213141516171810919

திருவெம்பாவை பாடல் – 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.  ———-[ 20 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும்  ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும்  காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராட ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

 

போற்றி எல்லா   உயிர்களாலும் போற்றப்படும் இறைவனே!
நின் ஆதியாம்   பாதமலர் போற்றி உன்   துவக்கமான மலர் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்.
நின் அந்தமாம்   செந்தளிர்கள் போற்றி உன்   முடிவான செந்தளிர்கள் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்
எல்லா உயிர்க்கும்   தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா   உயிர்களையும் படைக்கும் உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்
எல்லா உயிர்க்கும்   போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா   உயிர்களையும் காக்கும் உன் மலர் போன்ற மென்மையான திருவடிகளை வணங்குகிறோம்
எல்லா உயிர்க்கும்    ஈறாம் இணையடிகள் போற்றி எல்லா   உயிர்களும் இறுதியில் வந்து அடையும் இலக்கான உன் இரண்டு திருவடிகளையும் வணங்குகிறோம்
மால் நான்முகனும்    காணாத புண்டரிகம் போற்றி திருமால்,   நான்முகன் இருவரும் தேடியும் கண்டடைய இயலாத உன் தாமரை போன்ற திருவடிகளை வணங்குகிறோம்
யாம் உய்ய   ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள் போற்றி எங்களைக்   கடைத்தேற்றுவதற்காக  ஆட்கொண்டு அருளும் பொன்   மலர்ப் பாதங்களை வணங்குகிறோம்
அருளுகயாம் மார்கழி   நீராட   ஏலோர்  எம்பாவாய். மார்கழி   நீராடி வந்த எங்களுக்கு [ இத்தகைய உயர்வான பாதங்களை வந்து அடையும் பேறை ] அருள்வாயாக.

பொருள்:

எல்லா உயிர்களாலும் போற்றப்படும் இறைவனே!

உன் துவக்கமான மலர் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்.

உன் முடிவான செந்தளிர்கள் போன்ற திருவடிகளை வணங்குகிறோம்.

எல்லா உயிர்களையும் படைக்கும் உன் பொற்பாதங்களை வணங்குகிறோம்.

எல்லா உயிர்களையும் காக்கும் உன் மலர் போன்ற மென்மையான திருவடிகளை வணங்குகிறோம்.

எல்லா உயிர்களும் இறுதியில் வந்து அடையும் இலக்கான உன் இரண்டு திருவடிகளையும் வணங்குகிறோம்.

திருமால், நான்முகன் இருவரும் தேடியும் கண்டடைய இயலாத உன் தாமரை போன்ற திருவடிகளை வணங்குகிறோம்

எங்களைக் கடைத்தேற்றுவதற்காக  ஆட்கொண்டு அருளும் பொன் மலர்ப் பாதங்களை வணங்குகிறோம்.

மார்கழி நீராடி வந்த எங்களுக்கு [ இத்தகைய உயர்வான பாதங்களை வந்து அடையும் பேறை ] அருள்வாயாக.

தத்துவ விளக்கம்:

இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழிகளை இவ்வாறு 20 பாடல்களின் மூலம் உணர்த்தும் மாணிக்கவாசகர், முத்தாய்ப்பாக, ‘தான்’  என்னும் ஆணவம் ஒழித்து, அவனுடைய பாதங்களை முழுமையாகச் சரணடைந்து விடுவதே  எல்லா வழிகளிலும் ஏற்ற வழியென்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார் .

இத்துடன் திருவெம்பாவை முடிவுற்றது.

திருவெம்பாவை பாடல் – 19

முந்தைய பாடல்கள்: 1 23456781112131415161718109

திருவெம்பாவை பாடல் – 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.  ———-[ 19 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று  உரைப்போம் கேள்
எம் கொங்கை  நின் அன்பர்  அல்லார்  தோள்  சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க
இங்கு இப் பரிசே எமக்கு எம் கோன் நல்குதியேல்
எங்கு  எழில் என் ஞாயிறு  எமக்கு ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

எங்கள் பெருமான் எங்கள்   தலைவனே!
உன் கையில்  பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று அங்கப் பழஞ்சொல்   புதுக்கும் எம் அச்சத்தால் ‘உன்   கைப் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பழமொழியை திரும்பவும் கூறுவது தேவை இல்லாதது   என்ற அச்சத்தால்,
உனக்கொன்று  உரைப்போம் கேள் உன்னிடம்   ஒன்று உரைப்போம், [தயை கூர்ந்து] கேள்
எம் கொங்கை  நின் அன்பர்    அல்லார்  தோள்  சேரற்க [உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம்],   உன் அடியவர் தவிர வேறு யாருக்கும் எங்கள் தோள் உரிமை ஆகாதிருக்கட்டும்
எம் கை  உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க எம் கை,   உனக்கான திருப்பணி அல்லாது,  வேறு எந்த   விதப் பணிகளும், [வேறு எவருக்கும் தொண்டு] செய்யாது இருக்கட்டும்.
கங்குல்   பகல் எம் கண் மற்ற ஒன்றும் காணற்க இரவும்,   பகலும், எங்கள் கண்கள்  [ உன்னைத் தவிர ]   வேறு எதையும், எவரையும் காணாதிருக்கட்டும்.
எம் கோன். எங்கள்   தலைவனே!
இங்கு இப்   பரிசே எமக்கு நல்குதியேல் இவ்வாறான   நிலையை எங்களுக்கு வழங்குவாய் எனில்,
என் ஞாயிறு  எங்கு    எழில் எமக்கு ஏலோர்  எம்பாவாய் ஞாயிறு   எந்தத் திசையில் எழுந்தாலும், எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

பொருள்:

எங்கள் தலைவனே!

‘உன் கைப் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்ற பழமொழியை திரும்பவும் கூறுவது தேவை இல்லாதது என்ற அச்சத்தால், உன்னிடம் ஒன்று உரைப்போம், [தயை கூர்ந்து] கேள்.

[உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம்], உன் அடியவர் தவிர வேறு யாருக்கும் எங்கள் தோள் உரிமை ஆகாதிருக்கட்டும்.  எம் கை, உனக்கான திருப்பணி அல்லாது,  வேறு எந்த விதப் பணிகளும், [வேறு எவருக்கும் தொண்டு] செய்யாது இருக்கட்டும். இரவும், பகலும், எங்கள் கண்கள்  [ உன்னைத் தவிர ] வேறு எதையும், எவரையும் காணாதிருக்கட்டும்.

எங்கள் தலைவனே!

இவ்வாறான நிலையை எங்களுக்கு வழங்குவாய் எனில், ஞாயிறு எந்தத் திசையில் எழுந்தாலும், எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

தத்துவ விளக்கம்:

அவனது அடியார்களுக்குத் தொண்டு செய்வதும்,  அவனது தாள் வணங்கியும், இரவும் பகலும் எப்போதும் அவன் நினைவாகவும், பார்க்கும் பொருளில் எல்லாம் அவன் தன்மையைப் பார்க்கும் நிலையையும்  அடைவதுதான் பிறவியின் பயன் ஆகும் என்பதை இப்பாடல் வழியாக உணர்த்துகிறார் மாணிக்க வாசகர்.

திருவெம்பாவை பாடல் – 9

முந்தைய பாடல்கள்: 1 2345678111213141516171810

திருவெம்பாவை பாடல் – 9

 

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோ ரெம்பாவாய்.      ———-[ 9 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன் அடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

[இவ்வாறு எழுந்து நீராடி கோயிலுக்கு வந்த பெண்கள் இறைவனை நோக்கி இவ்வாறு வழிபடுகின்றனர்.]

முன்னைப்   பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே பழமையான பொருட்களுக்கெல்லாம் முன்னேயான   பழையவனாகவும்,
பின்னைப்   புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே புதுமைகளுக்கு எல்லாம் பிற்பட்ட புதியவனாகவும்   விளங்கும் தன்மை உடையவனே !
உன்னைப்   பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னையே தலைவனாகக் கொண்டு உன் அடியவர்கள் ஆனோம்.
உன் அடியார்   தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்கு ஆவோம் உன் அடியார்களின் தாள் பணிவோம்.  அவர்களுக்குத் தோழர்கள் ஆவோம்.
அன்னவரே   எம்கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம்.   அவர் உகந்து சொல்வதற்கு ஏற்றாற்போல அவருக்கு அடிபணிந்து தொண்டு செய்வோம்.
இன்ன வகையே   எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர்  எம்பாவாய்.
எம் தலைவனே! இவ்வாறு அமையும் பேற்றை எங்களுக்கு   அருளினால், எந்தக் குறையும் இல்லாது வாழ்வோம்.

பொருள்:

பழமையான பொருட்களுக்கெல்லாம் முன்னேயான பழையவனாகவும், புதுமைகளுக்கு எல்லாம் பிற்பட்ட புதியவனாகவும் விளங்கும் தன்மை உடையவனே !

உன்னையே தலைவனாகக் கொண்டு உன் அடியவர்கள் ஆனோம். உன் அடியார்களின் தாள் பணிவோம்.  அவர்களுக்குத் தோழர்கள் ஆவோம். உன் அடியார்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வோம். அவர் உகந்து சொல்வதற்கு ஏற்றாற்போல அவருக்கு அடிபணிந்து தொண்டு செய்வோம்.

எம் தலைவனே! இவ்வாறு அமையும் பேற்றை எங்களுக்கு அருளினால், எந்தக் குறையும் இல்லாது வாழ்வோம்.

தத்துவ விளக்கம்:

இறைவனை அடைவதற்கான எளிய வழி, அவனுடைய அடியார்க்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்துத் தொண்டு செய்வதுதான் என்பதை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

திருவெம்பாவை பாடல் – 10

முந்தைய பாடல்கள்: 1 23456781112131415161718

திருவெம்பாவை பாடல் – 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.    ———-[ 10 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போது ஆர் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் , திருமேனி ஒன்றல்லன்
வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத  உலவா ஒருதோழன் , தொண்டர்  உளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

[கோயிலில் பணி செய்து கொண்டிருக்கும் சிறு பெண்களை நோக்கி இவ்வாறு கேட்கின்றனர்]

அரன் தன்   கோயில் , கோதில் குலத்து பிணாப் பிள்ளைகாள் சிவன்   கோவிலில் பணி செய்யும் குற்றமில்லாத குலத்தில் பிறந்த சிறுமிகளே!
பாதாளம்   ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் கீழ்   உலகங்கள் என்று அழைக்கப்படும் பாதாள உலகங்கள் ஏழிற்கும் கீழே, சொல்லமுடியாத   ஆழத்தில் தன் மலர் போன்ற அடிகளையும்,
போது ஆர்   புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே, எல்லா   உயரமான பொருட்களுக்கும் மேலே மலர் சூடிய தன் முடியையும் கொண்டவன் சிவன்.
பேதை ஒருபால்   , திருமேனி ஒன்றல்லன் அவன்   ஒர் உடலில் பாதியில் உமையவளையும் கொண்டிருப்பதால், அவன் ஒருவனல்லன், ஒரு   உருவத்தை மட்டுமே கொண்டவனும் அல்லன்.
வேதம் முதல்   விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் வேதம்   முதற்கொண்டு எல்லா வகையான பாடல்களால் அவனைப் போற்றித் துதித்தாலும்,
ஓத  உலவா ஒருதோழன் , தொண்டர்  உளன் முழுமையாக   ஓதி உணர்வதற்கு அரியவன்.  அவன்   தோழனாகவும் இருப்பான், தொண்டர்களின் உள்ளத்திலும் இருப்பான்.
ஏது அவன்   ஊர் ஏது அவன் பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய்.
[இப்படிப்பட்ட]   அவனது ஊர் , பேர் என்ன? அவனுக்கு உறவினர் யார்? அயலார் யார்?அவனைப் பாடும்   வழிமுறைகள் என்ன?

பொருள்:

சிவன் கோவிலில் பணி செய்யும் குற்றமில்லாத குலத்தில் பிறந்த சிறுமிகளே! கீழ் உலகங்கள் என்று அழைக்கப்படும் பாதாள உலகங்கள் ஏழிற்கும் கீழே, சொல்லமுடியாத ஆழத்தில் தன் மலர் போன்ற அடிகளையும், எல்லா உயரமான பொருட்களுக்கும் மேலே மலர் சூடிய தன் முடியையும் கொண்டவன் சிவன்.

அவன் ஒர் உடலில் பாதியில் உமையவளையும் கொண்டிருப்பதால், அவன் ஒருவனல்லன், ஒரு உருவத்தை மட்டுமே கொண்டவனும் அல்லன்.

வேதம் முதற்கொண்டு எல்லா வகையான பாடல்களால் அவனைப் போற்றித் துதித்தாலும்,  முழுமையாக ஓதி உணர்வதற்கு அரியவன்.  அவன் தோழனாகவும் இருப்பான், தொண்டர்களின் உள்ளத்திலும் இருப்பான்.

[இப்படிப்பட்ட] அவனது ஊர் , பேர் என்ன? அவனுக்கு உறவினர் யார்? அயலார் யார்? அவனைப் பாடும் வழிமுறைகள் என்ன?

 

தத்துவ விளக்கம்:

 

இறைவன் நம் அறிவின் அளவீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அதே நேரத்தில் ஆணவம் இல்லாமல் தூய அன்பு செலுத்தினால், நம் தோழனாகி, நம் உள்ளத்தில் குடி கொள்வான்.

திருவெம்பாவை பாடல் – 18

முந்தைய பாடல்கள்: 1 234567811121314151617

திருவெம்பாவை பாடல் -18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  ———-[ 18 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

அண்ணா மலையான் அடிக் கமலம்  சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

 

பெண்ணே! பெண்ணே!
அண்ணா மலையான்   அடிக் கமலம் அண்ணாமலையானின்  தாமரைபோன்ற திருவடிகளை
சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் தேவர்கள்   சென்று வணங்கும்போது , [அவனது பாதத்தின் ஒளி காரணமாக] , அவர்களுடைய திருமுடி   மகுடங்களில் இருக்கும் பல வகையான இரத்தினங்களின் ஒளி குறைந்து தோன்றும். அது   போல,
கண்ணார்   இரவி கதிர் வந்து கார் கரப்பத் [காலையில்   உதித்த] கதிரவனின் ஒளி எழும்பி இருளை நீக்கும்போது
தண்ணார்   ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப் குளிர்ந்த   ஒளியுடன் [ அதுவரை ] திகழ்ந்த    விண்மீன்கள் ஒளி குறைந்து காணாமல் போகின்றன.
பெண்ணாகி   ஆணாய் அலியாய்ப் பெண்ணாகி,   ஆணாகி, இரண்டு தன்மையும்  இல்லாமல் ஆகி
பிறங்கொளி   சேர் மிகுந்த   ஒளியுடைய  [ இறைவன் ]
விண்ணாகி   மண்ணாகி இத்தனையும் வேறாகிக் வானமும்,   நிலமும் ஆகி, வேறு தன்மையாகவும் ஆகி,
கண் ஆர்   அமுதமும் ஆய் நின்றான் கண்களால்   பருகி நிற்கும் அமுதமும் ஆகி நின்றான்.
கழல் பாடி
இப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர்  எம்பாவாய்.
[அப்படிப்பட்ட   இறைவனின்] திருவடிகளைப் பாடியவாறு, இந்த மலர்கள் நிறைந்த புனலில் குதித்த்து   நீராடுவோம்.

பொருள்:

பெண்ணே!  அண்ணாமலையானின்  தாமரை போன்ற திருவடிகளை, தேவர்கள் சென்று வணங்கும்போது , [அவனது பாதத்தின் ஒளி காரணமாக] , அவர்களுடைய திருமுடி மகுடங்களில் இருக்கும் பல வகையான இரத்தினங்களின் ஒளி குறைந்து தோன்றும். அது போல, [காலையில் உதித்த] கதிரவனின் ஒளி எழும்பி இருளை நீக்கும்போது குளிர்ந்த ஒளியுடன் [ அதுவரை ] திகழ்ந்த  விண்மீன்கள் ஒளி குறைந்து காணாமல் போகின்றன.

பெண்ணாகி, ஆணாகி, இரண்டு தன்மையும்  இல்லாமல் ஆகி, மிகுந்த ஒளியுடைய  [ இறைவன் ] வானமும், நிலமும் ஆகி, வேறு தன்மையாகவும் ஆகி,  கண்களால் பருகி நிற்கும் அமுதமும் ஆகி நின்றான்.  [அப்படிப்பட்ட இறைவனின்] திருவடிகளைப் பாடியவாறு, இந்த மலர்கள் நிறைந்த புனலில் குதித்த்து நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:

எப்படி கதிரவன் முன்னால், மற்ற விண்மீன்கள் ஒளி இழக்கின்றனவோ, அது போலவே இறைவனின் முன்னால் மற்ற பொருள்வகைச் செல்வங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழக்கின்றன, இதனை மனதிற்கொண்டு, பொருளின் மீது பற்றுக் கொள்ளாமல் , இறை அருளின் மீது மனதைச் செலுத்த வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.