திருவெம்பாவை பாடல் – 18

முந்தைய பாடல்கள்: 1 234567811121314151617

திருவெம்பாவை பாடல் -18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.  ———-[ 18 / 20]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

அண்ணா மலையான் அடிக் கமலம்  சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண் ஆர் அமுதமும் ஆய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

 

பெண்ணே! பெண்ணே!
அண்ணா மலையான்   அடிக் கமலம் அண்ணாமலையானின்  தாமரைபோன்ற திருவடிகளை
சென்று இறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல் தேவர்கள்   சென்று வணங்கும்போது , [அவனது பாதத்தின் ஒளி காரணமாக] , அவர்களுடைய திருமுடி   மகுடங்களில் இருக்கும் பல வகையான இரத்தினங்களின் ஒளி குறைந்து தோன்றும். அது   போல,
கண்ணார்   இரவி கதிர் வந்து கார் கரப்பத் [காலையில்   உதித்த] கதிரவனின் ஒளி எழும்பி இருளை நீக்கும்போது
தண்ணார்   ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப் குளிர்ந்த   ஒளியுடன் [ அதுவரை ] திகழ்ந்த    விண்மீன்கள் ஒளி குறைந்து காணாமல் போகின்றன.
பெண்ணாகி   ஆணாய் அலியாய்ப் பெண்ணாகி,   ஆணாகி, இரண்டு தன்மையும்  இல்லாமல் ஆகி
பிறங்கொளி   சேர் மிகுந்த   ஒளியுடைய  [ இறைவன் ]
விண்ணாகி   மண்ணாகி இத்தனையும் வேறாகிக் வானமும்,   நிலமும் ஆகி, வேறு தன்மையாகவும் ஆகி,
கண் ஆர்   அமுதமும் ஆய் நின்றான் கண்களால்   பருகி நிற்கும் அமுதமும் ஆகி நின்றான்.
கழல் பாடி
இப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர்  எம்பாவாய்.
[அப்படிப்பட்ட   இறைவனின்] திருவடிகளைப் பாடியவாறு, இந்த மலர்கள் நிறைந்த புனலில் குதித்த்து   நீராடுவோம்.

பொருள்:

பெண்ணே!  அண்ணாமலையானின்  தாமரை போன்ற திருவடிகளை, தேவர்கள் சென்று வணங்கும்போது , [அவனது பாதத்தின் ஒளி காரணமாக] , அவர்களுடைய திருமுடி மகுடங்களில் இருக்கும் பல வகையான இரத்தினங்களின் ஒளி குறைந்து தோன்றும். அது போல, [காலையில் உதித்த] கதிரவனின் ஒளி எழும்பி இருளை நீக்கும்போது குளிர்ந்த ஒளியுடன் [ அதுவரை ] திகழ்ந்த  விண்மீன்கள் ஒளி குறைந்து காணாமல் போகின்றன.

பெண்ணாகி, ஆணாகி, இரண்டு தன்மையும்  இல்லாமல் ஆகி, மிகுந்த ஒளியுடைய  [ இறைவன் ] வானமும், நிலமும் ஆகி, வேறு தன்மையாகவும் ஆகி,  கண்களால் பருகி நிற்கும் அமுதமும் ஆகி நின்றான்.  [அப்படிப்பட்ட இறைவனின்] திருவடிகளைப் பாடியவாறு, இந்த மலர்கள் நிறைந்த புனலில் குதித்த்து நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:

எப்படி கதிரவன் முன்னால், மற்ற விண்மீன்கள் ஒளி இழக்கின்றனவோ, அது போலவே இறைவனின் முன்னால் மற்ற பொருள்வகைச் செல்வங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழக்கின்றன, இதனை மனதிற்கொண்டு, பொருளின் மீது பற்றுக் கொள்ளாமல் , இறை அருளின் மீது மனதைச் செலுத்த வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.

Leave a comment