திருவெம்பாவை பாடல் – 15

முந்தைய பாடல்கள்: 1 234567811121314

திருவெம்பாவை பாடல் -15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.   —–  [15 /20 ]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

ஓர் ஒருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர் ஒருகால் வாயோவாள் சித்தம்  களி கூர
நீர் ஒருகால் ஓவா நெடும் தாரை கண் பனிப்பப்

பார் ஒருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேர் அரையற்கு  இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண் முலையீர் வாயார நாம் பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து  ஆடு  ஏலோர்  எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

 

வார் பூண்    உருவ முலையீர் கச்சை அணிந்த   அழகிய மார்புடைய பெண்களே!
ஓர் ஒருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர் ஒருகால்
ஒவ்வோர்   முறையும் , எம்பெருமான், எம்பெருமான் என்று கூவி,  நம்பெருமானின் சிறப்பினை இடைவிடாமல் வாய்   ஓயக் கூறி,
சித்தம்    களி கூர
நீர் ஒருகால் ஓவா நெடும் தாரை கண் பனிப்பப்
சித்தம்  மகிழ்வடைந்து, கண்களில் நீண்ட தாரையாய் [   ஆனந்தக்] கண்ணீர், ஓயாமல் பெருக்கெடுத்து ஓட
பார் ஒருகால்,   வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்,  [சிவனைத் தவிர ] வேறு எந்த தேவரையும் வணங்காத இவளைப்   பாருங்கள்.
இங்ஙனே  பேர் அரையற்கு  பித்து ஒருவர் ஆமாறும் இவ்வாறு,   பெருந்தலைவனான சிவன் மீது பித்துப் பிடித்துக் கிடக்கும் அளவிற்கு,
ஆர் ஒருவர்   இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் யார்   நம்மை ஆட்கொள்கிறாரோ , அந்த  இறைவனின்   திருவடிகளை ,
வாயார நாம்   பாடி   ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து  ஆடு  ஏலோர்    எம்பாவாய். வாய்   நிறையப் பாடி, அழகு மிக்க மலர்கள் நிறைந்த புனலில் குதித்து நீராடுவோம்.

பொருள்:

கச்சை அணிந்த அழகிய மார்புடைய பெண்களே!  ஒவ்வோர் முறையும் , எம்பெருமான், எம்பெருமான் என்று கூவி,  நம்பெருமானின் சிறப்பினை இடைவிடாமல் வாய் ஓயக் கூறி,  சித்தம்  மகிழ்வடைந்து, கண்களில் நீண்ட தாரையாய் [ ஆனந்தக்] கண்ணீர், ஓயாமல் பெருக்கெடுத்து ஓட சிவனைத் தவிர ] வேறு எந்த தேவரையும் வணங்காத இவளைப் பாருங்கள்.

இவ்வாறு, பெருந்தலைவனான சிவன் மீது பித்துப் பிடித்துக் கிடக்கும் அளவிற்கு, யார் நம்மை ஆட்கொள்கிறாரோ , அந்த  இறைவனின் திருவடிகளை , வாய் நிறையப் பாடி, அழகு மிக்க மலர்கள் நிறைந்த புனலில் குதித்து நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவரின் நிலையான –  எல்லாப் புலன்களும் அவனை நோக்கியே நகர்ந்து போகும் பித்தான நிலை – எப்படி இருக்கும் என்பதை, இங்கு மாணிக்க வாசகர் காட்டுகிறார்.

Leave a comment