மழை-2, துளி-34 : வெற்றியின் பாதையில்…

மழை-2, துளி-34  :   வெற்றியின் பாதையில்… சித்ரா விசுவநாதன்

1.

உச்சியை அடைவதென்பது

உயர்ந்த விஷயம்தான் – என்றாலும்

ஏறி வந்த பிறகு –உன்னால்

எண்ணிக்கூடப் பார்க்கப்படாத

ஏணிகள் எத்தனை ?

உன் காலின்கீழ் மிதிபட்டு நசுங்கிய

உள்ளங்கள் எத்தனை?

கடந்து வந்த இன்னல்கள்

களையக் கைகொடுத்துத்

துணை நின்ற தோள்கள் எத்தனை?

என்றேனும் ஒரு நாள்

எண்ணிப் பார்த்ததுண்டா?

முள்ளின் படுக்கையாய்

மூடிக் கிடந்த பாதை – உன்

பாதம் பட்டவுடன்

பூக்களாய் மாறியதாகவா

பூரித்துப் போகிறாய்?

உற்றுப் பார் !

உன் பாதம் நடந்து செல்ல

தன் உடலையே பாதையாய்க்

கிடத்திக் கிடக்கிற

முகங்கள் தெரியும்.

உன்னை தீபமாய் எரியவிட்டு

அடியில் கருமையாய்த் தன்னை

ஒளித்துக் கொண்ட

தியாக மெழுகுவர்த்திகள்

உன் கண்ணில் படும்.

உச்சியை அடைவதென்பது

உயர்ந்த இலட்சியம் தான்!

தடுமாறித் தவித்து – நீ

தடுக்கி விழும்போதும்

தாங்கித் தூக்கிய கைகளைப் பற்றி

ஒரு நிமிடம்

பாசமாய்க் கண்பார்த்து

புன்னகைப் பூக்களைச் சேர்த்து

நன்றி சொல்லி விட்டுப்  போயேன்!

2.

நீ செல்லும் வழியில்

வட்டமிட்டுப் பறந்து வரும்

வண்ணத்துப் பூச்சியின்

சிறகில் வரைந்திருக்கும்

நிறங்கள் எத்தனை – நின்று கணக்கிட்டு

நெஞ்சில் பதித்துக் கொண்டு

நடந்து பார்!

அடைய ஆசைப்படும் உச்சியும்கூட

உனக்குப் பக்கமாய்த் தெரியும்.

காற்று உன் கால்களுக்கு

இறக்கை கட்டி விடும்.

உறுதியாய் ஒன்றை மட்டும்

உன்னில் பதித்துக் கொள்.

இடறி விட்டுச் செல்லும்

இதயமற்றவர்கள் குறித்து

இடிந்து போகாமல்

இமயமென நடைபோட

இயலும் என்றால்,

தொடுவானம் உன் எல்லை- தோழனே!

துணிந்து நட

உலக விளிம்பு வரை

ஒன்றாய்ப் பயணிக்கலாம்

Leave a comment