திருவெம்பாவை பாடல் – 14

முந்தைய பாடல்கள்: 1 2345678111213

திருவெம்பாவை பாடல் -14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.    ———[ 14 / 20 ]

அசை பிரிக்கப்பட்ட பாடல்:

 

காதார் குழை ஆடப் பைம்பூண் கலன் ஆடக்
கோதை குழல் ஆட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல் ஆடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருள்ஆ மாபாடிச்

சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த  பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடு ஏலோர் எம்பாவாய்.

பொருள் புரியும்படி மாற்றப்பட்ட பாடல்:

 

காதார் குழை   ஆடப் பைம்பூண் கலன் ஆடக் காதில்   அணிந்துள்ள தோடுகள் அசைந்தாட,    பசும்பொன்னால் ஆன அழகான அணிகலன்கள் அசைந்தாட,
கோதை குழல்   ஆட வண்டின் குழாம் ஆடச் மலர்சூடிய   கூந்தல் ஆட, அந்த மலர்களைத் தேடி வந்த வண்டுகளின் கூட்டம் பறந்தாட,
சீதப் புனல்   ஆடிச் குளிர்ந்த   குளத்தில் நீராடி,
சிற்றம்பலம்   பாடி, வேதப் பொருள் பாடி அப்பொருள்ஆ மாபாடிச் சிவன்   ஆடும் சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தையும், அதன் உள்ளிருக்கும் இறைவனைப் பாடி,
சோதி திறம்   பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி ஒளியான   இறைவனின் தன்மையைப் பாடி, [அவன் அணிந்துள்ள] கொன்றை மலர் மாலையைப் பாடி,
ஆதி திறம்   பாடி அந்தம்ஆ மாபாடிப் முதலாகவும்   முடிவாகவும் உள்ள அவன் இயல்பைப் பாடி
பேதித்து   நம்மை வளர்த்து எடுத்த அறியாமை   இருளில் ஆழ்ந்து கிடந்த நம்மை வெளியே எடுத்து உயர்வாக்கிய
பெய்வளை   தன்
பாதத் திறம் பாடி ஆடு ஏலோர் எம்பாவாய்.
உமையின்  திருவடிகளையும் பாடி நீராடுவோம்.

பொருள்:

காதில் அணிந்துள்ள தோடுகள் அசைந்தாட,  பசும்பொன்னால் ஆன அழகான அணிகலன்கள் அசைந்தாட,  மலர்சூடிய கூந்தல் ஆட, அந்த மலர்களைத் தேடி வந்த வண்டுகளின் கூட்டம் பறந்தாட, குளிர்ந்த குளத்தில் நீராடி, சிவன் ஆடும் சிற்றம்பலத்தைப் பாடி, வேதத்தையும், அதன் உள்ளிருக்கும் இறைவனைப் பாடி, ஒளியான இறைவனின் தன்மையைப் பாடி, [அவன் அணிந்துள்ள] கொன்றை மலர் மாலையைப் பாடி, முதலாகவும் முடிவாகவும் உள்ள அவன் இயல்பைப் பாடி, அறியாமை இருளில் ஆழ்ந்து கிடந்த நம்மை வெளியே எடுத்து உயர்வாக்கிய உமையின்  திருவடிகளையும் பாடி நீராடுவோம்.

பெய்வளை = பெண்

தத்துவ விளக்கம்:

வேதமாகவும், வேதத்தின் உட்பொருளாகவும், முதலாகவும், முடிவாகவும் உள்ள அவன் தாள் வணங்கி, அறியாமை இருளில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார் மாணிக்க வாசகர்.

Leave a comment